மிகஅதிகமாகப் பெண்கள் பேரிடர்க்காளாகும் நாடுகளின் வரிசையில் நான்கவதாக இந்தியா!

மிகஅதிகமாகப் பெண்கள் பேரிடர்க்காளாகும் நாடுகளின் வரிசையில் நான்கவதாக இந்தியா!

 

வனமுறை, கற்பழிப்பு, உடல்நலக் கவனிப்பின்மை, குமுகக் கட்டுப்பாடு மீறலுக்கான கொலைத்தண்டனை போன்றவற்றிற்குப் பெண்கள் ஆளாவதை வைத்து நடந்த இலண்டன் தாமசு இராய்ட்டர் நிறுவன வல்லுநர் கருத்தறி ஆய்வின்படி உலகில் பெண்கள் பேரிடர்க் காளாகும் நாடுகளின் வரிசை கடந்த அறிவன்கிழமை (8-6-2011) வெளிவந்துள்ளது.

 

இவ்வரிசையில், முதல்நாடாக ஆப்கனிசுத்தான் உள்ளது; இரண்டாவது காங்கோ; மூன்றாம் நாடு பாக்கிசுத்தான், நான்காம் நாடாக இந்தியாவும், ஐந்தாம் நாடாக சோமாலியாவும் உள்ளன.

 

பெண் முதிர்கருக்கொலை, குழந்தைமணம், விற்பனை, வீட்டு அடிமையாக நடத்தல் முதலிய கொடுமைகளே இந்தியா நான்காமிடம் எய்தக் காரணங்களாக இருந்துள்ளன.

 

இந்தியாவில் –

பத்துக்கோடிப் பெண்கள் ஏதோ ஒரு வகையில் விற்றல் வாங்கலுக்குள்ளாகி யுள்ளனர் என்பது முன்னாள் இந்திய உள்துறைச் செயலாளர் மதுக்கர் குப்தாவின் கூற்று.

 

சென்ற நூற்றாண்டில் பெண்கரு அழிப்பு, பெண்கருச் சிதைவு, பெண்குழவிக் கொலை, காரணமாகக் ‘காணாமற்போன’ பெண்கள் 5 கோடி.

 

44.5 விழுக்காட்டுப் பெண்கள் 18 அகவையை எட்டுமுன்பே மணமுடிக்கப் படுகின்றனர்.

 

இன்னும் விளக்கமாகப் படிக்க விரும்புவோர் இந்த முகவரிக்குச்செல்க:

http://in.news.yahoo.com/factbox-worlds-most-dangerous-countries-women-031509145.html

பழந்தமிழரின் புனைவுகள்!

பழந்தமிழரின் புனைவுகள்!

வெளிநாட்டின், குறிப்பாக மேற்குலகத்தின் பெண்கள் உதடுகளுக்கும் நகங்களுக்கும் வண்ணப்பூச்சு இட்டுக்கொள்வதையும், முகத்திற்குப் பல்வேறு மணக்களிம்புகளும் மாவும் பூசிக்கொள்வதையும், உடல் வெண்மையாகத் தோன்ற பலவகையான நீர்மக் குளியல்கள் குளிப்பதையும் அறிந்த நம் நாட்டு மக்களும் அவர்களைப் போலவே பூச்சும் புனைவும் செய்துகொள்ள முனைந்திருப்பதும் நாம் அறிந்தவையே.

அழகி கிளியோபாட்டிரா கழுதைப் பாலில் குளித்ததாகப் படித்திருக்கிறோம். சில திரை நடிகைகளும் அவ்வாறு குளித்ததாகக் கூடச் செய்திகள் வருவதுண்டு.

பழந் தமிழரிடையேயும் ஒப்பனைப் பழக்கம் இருந்திருக்கிறது.

வட்டிசைச் செய்தி என்பது சாந்து அணிதலையும், கோலங்கோடல் என்பது பொது ஒப்பனையையும், கோவையின் சேர்ப்பு என்பது அணிகல ஒப்பனையையும், பாயற்பள்ளி என்பது படுக்கையறை ஒப்பனையையும், அழகுச்சுண்ணம் முகம் உடலுக்குப் பூசும் மணமாவையும் குறிப்பனவாம்.

தூநீராடல், மணத்தூள் நீராடல் என்பவையும் உண்டு. மலராய்ந்து தொடுத்தல் பூ ஒப்பனையாகும்.

கண்மை இடல், சந்தன குங்குமச் சாந்தினால் ‘தொய்யில்’ சித்திரம் வரைந்து கொள்ளல், உதடு,கன்னம், நெற்றி நகங்களில் அலத்தகம் என்னும் செம்பஞ்சுக் குழம்பால் சாயமிட்டுக் கொள்ளல், முகத்துக்கு வண்ண நறுமாவிடல், கூந்தலுக்கு அகிற்புகையிடல் முதலானவை தமிழர் ஒப்பனையின் கூறுகளாகும்.

ஆடவரும் பெண்டிரும் மூன்றுமுறை மூன்றுவகைப் பொடிகலந்த நீரில் குளித்தனர். முதற் பொடியில் துவர்ப்பொருளும், இரண்டாவதில் விரை(மண)ப்பொடியும், மூன்றாவதில் ஓமாலிகைப் பொடியும் கலந்து குளித்தனர்.

துவர்ப்பொருள் பத்து வகையும், மணப்பொடி ஐந்து வகையும், ஓமாலிகைப்பொடி 32 வகையுமென சிலம்பில் கடலாடு காதை கூறுகிறது. அவை என்னென்ன என்று அடியார்க்கு நல்லார் உரையில் பட்டியலிட்டுக்காட்டுகிறார்.

ஒப்பனையில் அந்தக்காலத்திலேயே தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்களாக இல்லை என்று தெரிந்துகொள்ள முடிகிறது.

பழந்தமிழ் இலக்கியப் படைப்புச் சிறப்பு

பழந்தமிழ் இலக்கியப் படைப்புச் சிறப்பு.

 

‘சங்க’ இலக்கியங்களைக் கழக இலக்கியங்கள் என்று மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் குறிப்பார். இக்கால் உள்ள அரசியல் சார்பான கழகங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை. புலவர் அவையைக் கழகம் என்று கூறினர். ‘முச்சங்கம்’ என்பதை முக்கழகம் என்றே கூறுவர்.

 

மாந்தரின் அக உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப் பட்டவை அக இலக்கியங்கள். தலைவன், தலைவி, தோழி, செவிலி, தோழன் போன்ற மாந்தர் உளத்தெழும் அக உணர்வுகளே இப்பாடல்களின் கரு அல்லது பாடுபொருள் ஆகும். மக்களின் களவு(திருமணத்திற்கு முன்னான காதல்), கற்பு வாழ்க்கையின் உணர்வுகளை நடுவாகக் கொண்டு படைக்கப் பட்டவையே அகப்பாடல்கள்.

 

காதல் உள்ளங்களின் ஈடிணையற்ற இணைப்பை, ஊறியெழும் உயர்ந்த உணர்வின் பரிமானங்களை (dimension – பரிமானம்: தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகராதி பக்கம் 244), அவர்களின் உயர் பண்பை இன்னும் இவைபோலும் பல கூறுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டனவே அக இலக்கியங்கள்.

 

உலக இலக்கிய ஆய்வறிஞர்கள், பொதுவான மாந்த உணர்வுகளையும், பொதுவான உண்மைகளையும், படம்பிடித்துக் காட்டுவனவாகப் பாடல்கள் இருக்கவேண்டுமென்று கூறுகின்றனர். (பாடல், பாட்டு, பா, செய்யுள்,’கவிதை’ ஆகியவை ஒருபொருட் பன்மொழிகளே) ஒரு நல்ல இலக்கியப் படைப்பு, காலங் கடந்தும், நாடு கடந்தும் நிலைபெறுவதற்கும் போற்றப் படுவதற்கும் அதன் கரு அல்லது பாடுபொருள் உலகப் பொது உண்மையைக் கூறுவதாக இருக்கவேண்டுமென அறிஞர் கூறுவர்.

 

செயற்கரிய செயல்களும் வீரவினைப்பாடுகளும் களமாடல்களும் மட்டுமன்றி மாந்தரின் நுண்ணிய உயர்ந்த உணர்வுகளும் ஒப்பற்ற பாடுபொருள்களே. கழக இலக்கியங்கள், குறிப்பாக அகத்திணை இலக்கியங்கள் தனிப்பட்ட ஒருவரின் உணர்வுகளைக் கூறுவனவாக அமையாது பொதுவான மாந்த உணர்வுகளை ஒப்புயர்வற்ற முறையில் பேசுகின்றன.

 

கழக இலக்கியங்களில், பொதுவான பெண்அன்பின் ஆழத்தை உயரத்தை இன்னும் பல பரிமானங்களை, உலகின் எந்த மூலையிலும் எந்தக் காலத்திலும் உள்ள பெண்அன்பிற்குப் பொருந்துவதாகப் படைத்திருப்பது வியப்பளிக்கும் சிறப்பாகும். தனிப்பட்ட மாந்தரினும் உணர்வுகளே முதன்மையாகும்.

 

கழக அக இலக்கியங்களில் தனிமாந்தருக்கு முதன்மை இல்லை. உணர்வுகளே முன்நிற்கின்றன. மாந்தரை உருவாக்கி அவர்கள் வழியே ஆசைகள், வேட்கைகள், பாசங்கள், பண்புகள், ஆற்றாமைகள் போன்ற பல்வேறு உணர்வுகளைச் செல்லச் சொல்லிய சிறப்பு ஒப்பற்றதாகும். அகத்திணை இலக்கியப் படைப்புகளில் உலகப் பொது உணர்வுகள் விளக்கப்படுதன் காரணமாக அவற்றை “Literature of universal thought, experience and feeling” என்று அறிஞர் ச.அகத்தியலிங்கம் கூறுவார்.

 

தமிழின் ஒப்பற்ற இலக்கண இலக்கியமாகிய தொல்காப்பியம், “மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்” – என்று கூறி நெறிப்படுத்தியிருப்பது வியப்பளிக்கும் சிறப்பாகும்.

 

குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய இலக்கியங்கள் அகவுணர்வுப் பாடல்களைக் கொண்டவையாகத் திகழ்கின்றன. அகநானூற்றுப் பாடல் ஒன்றன் ஒரு பகுதியை எடுத்துக்காட்டிற்காகப் பார்ப்போம்.

 

கயமனார் எழுதிய இப்பாடல் அகநானூற்றில் ஏழாம் பாடலாக உள்ளது. துள்ளித் திரிந்த மான்போன்ற மகள் பூப்படைகிறாள். பேதைப் பருவம் கடந்து பெதும்பைப் பருவம் எய்துகிறாள். செவிலித்தாய் அவளை (தலைவியை) நோக்கிக் கூறுவதாகப் பாடல் படைக்கப் பட்டுள்ளது. பாடலின் தொடக்கப்பகுதி இது.

 முலைமுகம் செய்தன; முள்எயிறு இலங்கின;

தலைமுடி சான்ற; தண்தழை உடையை;

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;

மூப்புடை முதுபதி தாக்கணங்கு உடைய;

காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை;

பேதை அல்லை; மேதைஅம் குறுமகள்!

பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை…..”

-என்று பாடல் தொடங்கித் தொடர்கிறது. இப்பாடற் பகுதிக்கு உரையாசிரியர் (ஒளவை.சு.து.) தரும் விளக்கம்:

“அறிவுமிக்க சிறுமியே கேள்! இப்பொழுது நின் முலைகள் பருத்துக் கண்டாரைக் காமுறுத்துவனவாக நிரம்பின; நின்னுடைய பற்கள் தாமும் புத்தொளி பெற்றுத் திகழ்கின்றன. தலைமயிர் கூழையாகாமல் கூந்தலாகி ஐம்பாலாக வகுத்து முடிப்பதற்கு ஏற்றவாயின காண். இனி நீ அங்குமிங்கு மலமந்து ஓடியாடும் நின் தோழியரோடு கூடி எவ்விடத்திற்கும் போகாதே கொள்! இக் குறிஞ்சியிலமைந்த மிகப்பழைய இடங்கள் தம்பால் வருவாரைத் தீண்டி வருத்தும் தெய்வங்களையும் உடையன காண்! ஆதலால் இனி நீ நின்னைக் காக்கும் காவலையும் மேற்கொள்வாயாக! நம் முன்றிலிலும் போகாதே கொள்; கட்டுக் காவலுமின்றி மனம் போனபடி திரிதரும் பேதைப்பருவத்தினள் அல்லையே! பெதும்பைப் பருவத்து இல்லினுள் அடங்கியிருத்தற்கியன்ற இப்பெதும்பைப் பருவத்திலும் புறத்தே செல்லா நின்றனை!…..”

 

பாடலின் படைப்புத் திறனை என்னென்பது! பாருங்கள், சிறு சிறு சொற்களில் அருமையான செய்திகள்!

மேதைஅம் குறுமகள்! என்று மகளை அழைத்துக் கூறுகிறாள்! செய்திகளின் வரிசையைப் பாருங்கள்!

முலைமுகம் செய்தன;

முள்எயிறு இலங்கின;

தலைமுடி சான்ற;

தண்தழை உடையை;

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;

மூப்புடை முதுபதி தாக்கணங்கு உடைய;

காப்பும் பூண்டிசின்!

கடையும் போகலை!

பேதை அல்லை;

பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை…..”

 

ஒரு பாடலின் –‘கவிதை’யின் – சிறப்பிற்கும் பாடுபொருளுக்கும் ஒவ்வொரு சிறிய பண்புக்கூறும் உதவிடும். ஒருபோகாக உரைத்த சிறப்பு, உயர்வு சான்றதாக உள்ளது. கழக இலக்கியங்களின் சிறப்பு படிக்கப் படிக்க இன்பம் தருவதாகும். தமிழில் படைப்பெழுத முனைவார் ஒருமுறையேனும் கழக இலக்கியங்களைப் படித்த தகுதியினராதல் வேண்டுமென்று கூறினால் அது மிகையுரை அன்று! உண்மையே!

——————————————————————————————————–

நூல் – தூண்டுகோல்!


(அண்மையில் நடைபெற்ற நூலக விழாப் பாட்டரங்கத்தில் பாடிய நேரிசை ஆசிரியப்பா)

நூல் – தூண்டுகோல்!

பருகுறச் சுவைமிகும் பாட்டரங்(கு) இதனின்
செழிதகைத் தலைவீர்! செந்தமிழ்ப் பாவலீர்!
குழுமிய அறிஞீர்! கூர்த்துணர் பெரியீர்!
செயல்வல் இளமையீர்! சீர்சால் தாய்க்குலப்
பெயலளி உளஞ்சேர் இயல்சீர் எழிலீர்!
தோழமை சான்ற தூயநல் லுளத்தீர்!
ஆழன் பேந்தி அவையை வணங்கினேன்!

அறிவுரம் பெருக்கி அறியா மையுரம்
தெறிவுறக் கெடுப்பது நூலெனத் தெளிவாய்ப்
பவணந்தி நன்னூல் பகர்ந்திடும் இலக்கணம்!
இவணிதைப் பலரும் தவலற விளக்கினர்!
நூலின் சிறப்பையும் நூலக மாண்பையும்
ஏல விளக்கி சால உரைத்தனர்!

உன்னிடின் நூல்கள் உயர்வாழ் வளிப்பன!
பன்னெடுங் காலமாய்ப் பார்த்திடும் மெய்யிது!
அறிவுச் சுரங்கமாய் அகநம் பிக்கைச்
செறிவுற அளிக்கும் செழும்புதை யல்கள்!
அருமையாய்த் தூண்டிடும் அருஞ்செய லூக்கிகள்!
மருந்தாய் மாந்தர் மனவளம் சேர்ப்பவை!
நண்பனாய் குருவாய் நல்வழி காட்டியாய்
திண்ணிதாய் உதவிடும் நுண்ணிய உறவுகள்!

நூலிலா வாழ்வு போலி!; யானதை
ஏலி வாழ இயலா தென்றே
அறிஞர் செபர்சன் அறைகுவார்; மொழியும்
அறிவியல் வரலா றறமும் புனைவுறு
புதினம் அடங்க மதிநுட் பெழுத்தெலாம்
புதிய பழைய புத்தகம் அளிக்கும்!
நட்புப் பாலமாய் நன்னெஞ் சிணைக்கும்!
பெட்பற மடமை கொட்பில் விலக்கும்!
அறிவு வேட்கையை ஆற்றுநீ ரூற்றவை!
நெறிசேர் ஞானம் நேரளி அரசடி!

உடற்குறை யாளர்க்குத் துணையாம் ஊன்றுகோல்!
முடங்கல் வரைய முழுத்துணை எழுதுகோல்!
பொறியர் கலைஞர் பொய்யறு வணிகர்
நெறியுறப் பணிசெய நில்துணை அளவுகோல்!
உயர்வுற மாந்தர்க்கு உயர்நூல் தூண்டுகோல்!
மயர்தவிர் உண்மை மயக்கிலா தெளிவிதாம்!

சுடர்விளக் காயினும் தூண்டுகோல் வேண்டும்!
திடமுடைப் பொன்செய் திரிவிளக் காயினும்
வேண்டும் தூண்டுகோல் யாண்டுமென் றறிவோம்!
மாண்டிகழ் நூல்கள் தூண்டுகோல் ஆவன!
ஒழுக்கம் உயர்வு ஒற்றுமை உணர்வினை
இழுக்கற நூல்கள் இயம்பிடும் இவையே
என்றும் தூண்டுகோல் எனஉத விடுங்கொல்!
இன்றுயர் வடைந்த எல்லா அறிஞரும்
என்றோ படித்தநூல் எனக்குத் தூண்டுகோல்
என்று விளக்கலை இக்கால் கேட்கிறோம்!

விலங்குக்கூ டாரமாய் விளங்கிய சீனத்
திலங்கிய அறிவுப் புரட்சி எழற்கே
கன்பூ சியசின் கனல்நூல் தூண்டுகோல்!
இன்னும் பலவும் எடுத்துரைத் திடலாம்!

மார்க்கோ போலோ ஓர்ப்புற எழுதிய
ஈர்ப்புறு செலவுகள் எனும்நூல் தூண்டுகோல்
கொலம்ப சமெரிக்காக் கூர்ந்துகண் டிடவே!
புலந்தந் ததுபுது நிலங்கா ணற்கே!

மேலாண் மையியல் மேதகு அறிஞர்
தோலா பீட்டர் டிரக்கர் தம்வெற்றி
நூல்கள் தூண்டுகோல் நோன்றதால் என்கிறார்!

அரிசு டாட்டில் அவருடன் பிளாட்டோ
தெரிசாக் ரட்டீசு வரித்த நூல்கள்
அய்ரோப் பியரின் மறுமலர்ச் சிக்கும்
உய்தொழிற் புரட்சி உருவா தற்கும்
தூண்டுகோ லாகித் தொண்டு புரிந்தன!
ஈண்டுரை சான்றென இன்னொரு உண்மை!

‘கடையனுக் கும்கடைத் தேற்ற’ மெனும்பெயர்
உடையரசுக் கின்நூல் ஒருவர் படித்தார்
அந்நூல் தூண்டுகோல் ஆனதால் அவர்பெயர்
அண்ணல் காந்தியென் றானதை அறிவோம்!

தொலைக்காட் சிதரும் துடிப்புஉரைக் காட்சித்
தலைமுன் னோடித் தகைஞர் ஓப்பிரா
வின்பிரே
விடுக்கும் தென்பார் சூளுரை

‘என்றும் ஓயேன் எனதம ரிக்கா
நூல்படி நாடென நூக்குவேன்’ என்பது!
சால்புற நூற்படிப் பேல்பு மூலமாம்!

புத்தகம் நேசிப் போரெலாம் வாழ்வை
நித்தமும் நேசித் தித்தரை வாழ்பவர்!

நண்பரைத் தேர்கையில் நல்லவர் தேறல்போல்
தெண்மையில் நல்லநூல் தேர்ந்து படிப்போம்!
தூண்டுகோல் எனநூல் துணைதர
வேண்டும் வெற்றி வினையெலாம் விளைப்போம்!
——————————————————————————–

 

பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எதுசரி?


பிரித்தெழுதுவதா, சேர்த்தெழுதுவதா, எதுசரி?

பாடல்களைப் படிப்போர் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்னும் நோக்கத்தில், பலர், பாடலின் சொற்களை உடைத்துப் பிரித்துத் தனித்தனிச் சொற்களாக எழுதுகின்றனர்.
சிலர் உரைநடை எழுதும்போதும் சொற்களைப் பிரித்து எழுதுவதைப் பார்க்கின்றோம்.

அவனுடனே என்று சேர்த்தெழுதினால் with him என்று பொருள்படும்.
அவன் உடனே என்று பிரித்தெழுதினால் he at once என்று பொருள்படும்.
வந்தானானால் என்று சேர்த்தெழுதினால் if he comes என்று பொருள்படும்.
வந்தான் ஆனால் என்று பிரித்தெழுதினால் He came, but என்று பொருள்படும்.

நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு என்று சேர்த்து எழுதினால், நன்மை செய்வதிலுங்கூடத் தவறுண்டாகிவிடும் என்று பொருள்படும்.
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு என்று பிரித்தெழுதினால், நன்மை செய்ய நினைக்கும் தவறு உண்டு என்று பொருள் மயக்கம் ஏற்பட நேரும்.

எனவே, மிகக் கவனத்தோடு இடமறிந்து பொருள்மயக்கம் ஏற்படாதவாறு சேர்த்தோ பிரித்தோ எழுத வேண்டும்.

பொருள் உணரும் திறன் குறைந்த இக்காலத்தில், பாடல்களில் எல்லாச் சொற்களையும் பிரித்தே எழுதுதல் வேண்டும் என்ற கொள்கை பெரும்பாலானவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, கீழே உள்ள கம்பராமாயணப் பாடல் 797-ஐப் பாருங்கள்:

நற்றாயினு நல்ல னெனக்கிவ னென்று நாடி
இற்றேயிறை யெய்தினை ஏய்ந்தது கோடி யென்னாற்
பொற்றாரகன் மார்பத மில்லுழை வந்த போதே
உற்றார்செயன் மற்றுமுண் டோவென வுற்று ரைத்தான்.

இப் பாடலை,

நல்தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி
இற்றே இறை எய்தினை ஏய்ந்தது கோடி என்னால்
பொன்தார் அகல்மார்ப தம் இல்லுழை வந்த போதே
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான்.

என்று பிரித்து எழுதுகிறார்கள்; அச்சிடுகிறார்கள். முதல் முறைப்படி எழுதுகையில் நான்கடிகளின் முதற்சீர்கள் நற்றா, இற்றே, பொற்றா, உற்றார் என்றமைந்ததால் ஏற்படும் பாடலின் எதுகை இன்பத்தைப் பிரித்தெழுதுவதால் இழக்கிறோம் என்பது மட்டுமன்றிப் பாடலைப் படைத்தவனின் முழுத்திறமும் பாடலின் முழு நயமும் அறிய முடியாமற் போகின்றது.

எல்லாச் சொற்களையுமே சேர்த்தெழுதுதலும் எல்லாச் சொற்களையுமே பிரித்தெழுதுதலும் இக்காலத்தில் தமிழுக்குச் சிறப்பளிக்காது. தேவையான இடங்களில் பொருள் கெடாதபடி, நிறுத்தக் குறிகளையும் பயன்படுத்திச் சேர்த்தோ பிரித்தோ எழுதலே சிறப்பாம்.

உதவி : பாவாணரின் ‘கட்டுரை வரைவியல்’ நூல். பாவாணருக்கு நன்றி.

 

மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி



மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி  

 

பல தலைமுறையாகத் தொடர்ந்து வரும் குலத்தொடர்ச்சி, கொடியும் மரமும் போல் நீண்டும் தொடர்ந்தும் இருத்தலால் அதனைக் கொடியென்றும், கொடிவழி என்றும் மரபு என்றும் கூறுவது வழக்கம். தொடர்ந்து வரும் பழக்க வழக்கங்களையும் சொல் வழங்கும் வகையையும் மரபு என்பதுண்டு.

 

  

1

 மரபு

சொல் வழக்காற்றில், ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு நம் முன்னோர் – உயர்ந்தோர் -  வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவர் வழங்கியவாறு பயன்படுத்துவதே மரபு எனப்படும்.

எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே – என்பது நன்னூல் நூற்பா.

நாய் எழுப்பும் ஒலியைக் குரைத்தல் என்பது மரபு. மாந்தர் உரைப்பதைப் பேசுதல் என்பது மரபு.
நாய் பேசியது – இத்தொடர் மரபுக்கு மாறாக அமைந்துள்ளதால் மரபு வழுவாகும். நாய் குரைத்தது – என்பது மரபு வழா நிலை.

அறிஞர் ஒரு பொருளைக் கூறியவாறே  கூறுவது மரபு எனப்பட்டது. அதற்குத் தக்கவாறு மொழியை வழங்குவது மரபு வழாநிலையாகும்.

குதிரைக்குட்டி, ஆட்டிடையன், யானைப்பிளிறல், முருங்கைக்கீரை, கோழிப் பண்ணை என்பவற்றை குதிரைக்கன்று, ஆட்டுப்பாகன், யானைக்கனைப்பு, முருங்கைஇலை, கோழித்தொழுவம் எனக் கூறுதல் மரபுப்பிழையாகும். மற்றவைகளும் இவ்வாறே.

 

2

பொதுவினை மரபு வழாநிலை

வெவ்வேறு வினைகளுக்குரிய பல பொருள்களையும் ஒருசேரத்தழுவி நிற்கின்ற ஒரு பொதுச்சொல்லும், வெவ்வேறு வினைக்கு உரிய பொருள்களை எண்ணி நிற்கும் பல சிறப்புச் சொற்களும் தமக்குள் ஒன்றற்கு உரிய சிறப்பு வினையை வேண்டாமல், எல்லாவற்றிற்கும் உரியதொரு பொது வினையைக் கொண்டு முடியும்

1.அணி என்பது கவிக்கப்படுவது கட்டப்படுவது இடப்படுவது பூணப்படுவது முதலியவற்றிற்கு எல்லாம் பொதுச்சொல்லாதலின் அதனை அணிந்தார் எனப் பொதுவினை கொடுத்துச் சொல்லவேண்டும்.

2. சிறப்புச்சொற்களை எண்ணும் பொழுது, முடியும் குழையும் கணையாழியும் அரைஞாணும் அணிந்தார் எனப் பொதுவினையால் முடிக்க வேண்டும்.

 

3

சிறப்புவினை மரபு வழாநிலை

வினையும் சார்பும் இனமும் இடமும் பொருந்திப் பொருள் விளங்காத பலபொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்லைச் சிறப்புச் சொல்லோடு கூட்டிச் சொல்ல வேண்டும்.

 ‘மா’ – என்பது மாமரம் வண்டு குதிரை திருமகள் எனப் பலபொருள் தரும் ஒரு சொல்.

1.மா பூத்தது – என்று சொல்லும்போது, மரம் என்று பூத்தது என்ற வினையால் விளக்கமாகும்.

மா வீழ் மலர் – என்ற இடத்தில் வண்டு என்று சார்பால் விளக்கமாகும்.

தேர் கரி மாக் காலாள் – என்று கூறுகையில் குதிரை என்பது இனத்தால் விளக்கமாகும்.

மா வாழ் மார்பன் – என்றவிடத்து, திருமகள் என்று இடத்தால் விளக்கமாகும்.

2.மா ஏறினான் – என்று சொல்லும்போது  பொருள் புரியாததால், விளக்கமாகப் புரிவதற்காகப் ‘பாய்மா ஏறினான்’, ‘மாமரம் ஏறினான்’ எனச் சிறப்புச் சொல்லோடு சேர்த்துச் சொல்ல வேண்டும்.

 

4

தொடர்மொழிகள் ஒலிப்பு வேறுபாட்டால் பொருள் தெளிதல்

எழுத்து மாறாமல், பொருள் வேறுபடச் சொல்லும் சொற்றொடர்கள் சொல்லுகின்ற வகையினால் பொருள் விளக்கமாகும்.

செம்பொன்பதின்பலம் என்பதை, செம்பொன் பதின்பலம் என்று சொன்னால், செம்பொன் பத்துப்பலம் என்றும், செம்பு ஒன்பதின்பலம் என்றால், செம்பு ஒன்பது பலம் என்றும் விளங்கும்

புத்தியிலாதவன், புத்தியில் ஆதவன் – என்பது இன்னொரு  எடுத்துக்காட்டாகும். 

 

5

மரபு வழாநிலையும் வழுவமைதியும்

ஒருபொருட் பன்மொழியை அறிவோம். ஒரு பொருளின் மேல் பல பெயர்கள் வருகின்றபோது அவற்றின் இறுதியில் பொருள் ஒன்றே என்பது தோன்ற ஒரு முடிக்கும் சொல் கொடுத்துக் கூறுவர். சில இடங்களில், பொருள் ஒன்றே என்று தெரியும் போது, தனித்தனி முடிக்கும் சொல் கொடுத்தும் கூறுவர்.

1. ஆசிரியர் மொழிஞாயிறு தேவநேயர் விளக்கினார்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவன்.

- இவை, இறுதியில் ஒரு வினையும் பெயரும் கொடுக்கப்பட்டன.

2. அன்னை மொழியே வாழ்கவே, அழகு மொழியே வாழ்கவே, முன்னை மொழியே வாழ்கவே, முழுசெம் மொழியே வாழ்கவே -என்பதில் அன்னை மொழி, அழகு மொழி, முன்னை மொழி, முழுசெம் மொழி என்பன தமிழ் என்பது தெரிய நின்றதனால் பெயர் தோறும் வாழ்க என ஒரு வினை தரப்பட்டது.

 

6

சிறப்புப்பெயர்களின் பின் இயற்பெயர் வருதல்

குறிஞ்சி முதலிய ஐவகைத் திணையும், நிலமும், குலமும், குடியும், உடைமையும், குணமும், தொழிலும், கல்வியும் சிறப்புப்பெயரொடு இயற்பெயரையும் ஏற்கும்போது, இயற்பெயர் பின்வருதலே சிறப்பு. (முன்வருவது வழுவமைதியாகும்)

   

பின் இயற்பெயர்         -       முன் இயற்பெயர்

குன்றவன் குமரன்       -       குமரன் குன்றவன்        -திணை

சோழியன் சுடர்மணி    -        சுடர்மணி சோழியன்      -நிலம்

பனவன் துரோணன்     -        துரோணன் பனவன்       -குலம்

பாண்டியன் நெடுமாறன்    -     நெடுமாறன் பாண்டியன்   -குடி

பொன்னன் நம்பி      -         நம்பி பொன்னன்         -உடைமை 

கரியன் கம்பன்         -        கம்பன் கரியன்           -குணம்

நடையன் நல்லான்    -         நல்லான் நடையன்       -தொழில்

ஆசிரியன் அமுதன்    -         அமுதன் ஆசிரியன்       -கல்வி

 

7

சுட்டுப்பெயர் வருமிடம்

படர்க்கையில் உயர்திணை, அஃறிணை, விரவு(பொது)ப் பெயர்களோடு சுட்டுப்பெயர் சேரும்போது, வினையாகிய முடிக்குஞ்சொல் வருமாயின், அச்சுட்டுப்பெயர் பின்னே வரும்; முடிக்குஞ்சொல் பெயராக வருமாயின், அச் சுட்டுப்பெயர் முன்னேயோ பின்னேயோ வரும்.

1. முடிக்குஞ்சொல் வினையாயின்…

செழியன் வந்தான், அவனுக்கு உணவிடுக

எருது வந்தது, அதற்குப் புல்லிடுக

சிவப்பன் வந்தான், அவனுக்கு உணவிடுக; சிவப்பன் வந்தது, அதற்குப் புல்லிடுக

2. முடிக்குஞ்சொல் பெயராயின்…

நம்பி அவன், அவன் நம்பி

குதிரை அது, அது குதிரை

சாத்தன் இவன் இது சாத்தன்

 

8

அடுக்குத்தொடர்

அடுக்குத் தொடர், அசைநிலைக்கு இரண்டும் விரைவு, கோவம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள்களின் நிலைக்கு இரண்டும் மூன்றும், இசைநிறைக்கு இரண்டும் மூன்றும் நான்குமாக அடுக்கி வரும்.

1.அன்றே அன்றே                     – அசைநிலை

2.உண்டேன் உண்டேன்; போ போ போ – விரைவு, பொருள்நிலை

எய் எய்; எறி எறி எறி                – கோவம், பொருள்நிலை

வாழ்க வாழ்க; வருக வருக வருக      – மகிழ்ச்சி, பொருள்நிலை

பாம்பு பாம்பு; தீத் தீத் தீ               – அச்சம், பொருள்நிலை

உய்யேன் உய்யேன்; வாழேன் வாழேன் வாழேன் –துன்பம், பொ.நி.   

3. “ஏ ஏ இவளொருத்தி பேடியோ”

“நல்குமே நல்குமே நல்குமே நாமகள்”

“பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ” – இவை இசைநிறை.

அடுக்குத்தொடர் இரட்டைக் குழந்தைகள் போல் வேறுபட்டுத் தனியே பொருள் தரும்.

ஒரு சொல்லைப் பலமுறை சொல்லுதல் வழுவாயினும் இன்ன இடங்களில் சொல்ல்லாமெனல் வழுவமைதியும் இந்த எல்லையை மீறக்கூடாதெனல் வழுவாமல் காத்தலுமாம்.

 

9

மரபுவழாநிலை: இரட்டைக்கிளவி

இரட்டைக்கிளவி அவ்விரட்டிப்பில் பிரிந்து தனித்து ஒலிப்பதில்லை.

குறுகுறு நடந்து; துடிதுடித்துத் துள்ளிவரும்

இரட்டைக்கிளவி இலையிரட்டையும் பூவிரட்டையும் போல வேறுபடாமல் ஒன்றுபட்டுத் தனியே பொருள் தராது. இரட்டைக்கிளவியில் இரண்டு தடவைக்குமேல் ஒலி அடுக்கி வராது.

 

10

மரபுவழுவமைதி- ஒருபொருள் குறித்துவரும் பலசொற்கள்

ஒரு பொருளின்மேல் பல பெயர் சொல்லும்போது அப்பொருளி னின்றும் பிரிதல் இல்லாதவற்றை நீக்காமற் கொள்ள வேண்டும்.

ஆசிரியர் மதுரைகிழார் தமிழண்ணல் வந்தார்.

‘தென்மொழி’ நிறுவுநர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் பேசினார்.

ஒருபொருளைக் குறித்து வருகின்ற பல சொற்கள், அவ்வாறு வருவதற்குக் காரணம் இல்லையானாலும், சிறந்து (செவிக்குச் சொல்லின்பம் தோன்ற) நிற்பதால் மரபுவழு என்று நீக்கப்படா.

மீமிசை ஞாயிறு; உயர்ந் தோங்கு பெருமலை; குழித் தாழ்ந்த கண்; வெங் கொடும் போர்.

 

11

மரபு வழுவாமற் காத்தல்- முற்றும்மை வேண்டும் இடம்

இவ்வளவென்று அளவறியப்பட்ட பொருளையும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளையும் முடிக்கும் சொல்லோடு சேர்த்துச் சொல்லும்போது, உம்மை சேர்த்துக் கூறல் மரபு.

1.தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்; இருவினையும் சேரா;

முத்தமிழும் வல்லார். – இவ்வளவென்று அறிந்த பொருள் முற்றும்மை பெற்றன.

2. முயற்கொம்பு வானப்பூ என்றும் இல்லை; ஒளிமுன் இருள் எங்கும் இல்லை. – உலகில் இல்லாப் பொருள்கள் முற்றும்மை பெற்றன.

3.கண் இரண்டும் குருடு; எருது இரண்டும் கிழம் – பெயர் கொண்டு முடியும்போது உம்மை பெற்றன.

ஐந்தலை நாகம், நான்மறை முதல்வர் என்ற இடங்களில்இவ்வளவு என்று அறிந்த பொருளாயினும் வினைப்படுத்திச் சொல்லாமையால் உம்மை பெறவில்லை.

 

12

மரபுவழுவமைதி – செயப்படுபொருள் முதலியவற்றைக் கருத்தாவாகக் கூறுதல்

செயப்படுபொருளைச் செய்தது போல – கருத்தாவைப்போல வைத்து அதன்மேல் அக்கருத்தாவின் வினையை ஏற்றிச் கூறுதல் வழக்கிற்கு உரியதாகும்.

இம் மாடு யான் வாங்கியது; இச் சோறு காமராசர் கொடுத்தது; 

இவ் உளி நான் செதுக்கியது.

இவ் வீடு பாவேந்தர் இருந்தது.

இத் தொழில் நீ செய்தது.

 

13

மரபு வழுவாமற் காத்தலும் மரபுவழுவமைதியும்

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறு அடைமொழிகளால் அடுக்கப்பட்ட சொற்கள் உலக வழக்கு, செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிடத்தும் இனமுள்ளனவாயும் இனமில்லனவாயும் வரும்.

இனமுள்ளன                 -                       இனமில்லன

நெய்க்குடம், பொருட்பெண்டிர்  -  உப்பளம்                – பொருள்

குளநெல், காட்டாறு     -        ஊர்மன்றம்              – இடம்

தைவிளக்கு, முந்நாட்பிறை  -   நாளரும்பு               – காலம்

பூமரம், கலவமாமயில்    -      இலைமரம்              – சினை

செந்தாமரை, வெண்டாமரை   -  செம்போத்து             – குணம்

ஊன்றுகோல், குடிக்கூலி    -     முழங்குகடல்      – தொழில்                          

இனமுள்ளவற்றை அடை சேர்க்காது கூறின் குறித்த பொருள் விளங்காமல் பொதுவாய் இருக்கும்; உப்பளம் முதலியன அடை மொழி சேர்க்காமலும் பொருளை உணர்த்தும் இனமில்லன வற்றின் அடைமொழிகள் இயற்கை அடைமொழிகள் எனவும் கூறப்படுகின்றன

இனமுள்ளவற்றை அடைகொடுத்துக் கூறுதல் வழாநிலை ஆகும். இனமில்லனவற்றை அடைகொடுத்துக்கூறல் வழுவமைதி ஆகும்.

 

14

அடைமொழி மரபு வழுவாமற் காத்தல்

அடைமொழி இனத்தைத் தருவதோடு மட்டுமன்றி, அவ் இடத்திற்குப் பொருந்துமானால் இனமில்லாததையும் தரும்.

கோழி கூவிற்று என்றால் மற்ற பறவைகள் கூவவில்லை என்றும் பொருளைத் தருவதோடு பொழுது விடிந்தது என்ற பொருளும் பொருள்தருகிறது.

குடம் தூக்கிச் சென்றவன் வீழ்ந்தான் என்பதும் இன்னொரு எடுத்துக்காட்டு.

 

15

மரபு வழாநிலை மரபுவழுவமைதி – அடைமொழிகள் முதல்சினைகளை அடுத்து வருதல்

அடைமொழியும் ஒரு சினையும் ஒரு முதலுமாய் முறையே ஒன்றை ஒன்றுச் சிறப்பித்து வருதலும், இரண்டு அடைமொழி ஒரு முதலைச் சிறப்பித்து வருதலும் வழக்கமாகும். இரண்டு அடைமொழி ஒரு சினையைச் சிறப்பித்து வருதலும் இவ் வரம்பு கடந்து வருதலும் செய்யுளுக்கு உரிய வழக்கமாகும்.

1. வேல்கை முருகன்; செங்கால் நாரை; முழங்குதிரைக் கடல் – இவை ஓர் அடைமொழியும், ஒரு சினையும், ஒரு முதலுமாகி ஒன்றை ஒன்றுச் சிறப்பித்து வந்தன.

(வேல் – அடைமொழி, கை – சினை, முருகன் முதல்)

2. மனைச் சிறு கிணறு, சிறு கருங் காக்கை – இவற்றில் இரண்டு அடைமொழிகள் முதலைச் சிறப்பிக்கின்றன.

3. செய்யுள்: ’சிறு பைந் தூவி’, ‘கருநெடுங்கண்’ – இவற்றில் இரண்டு அடைமொழிகள் சினையைச் சிறப்பிக்கின்றன.

4. செய்யுள்: ‘பொருந்தோள் சிறு மருங்குல் பேரமர்க்கண் பேதை’

‘சிறு நுதல் பேரமர்க்கண் செய்யவாய் ஐயநுண்ணிடையாய்’ – இவை வரம்பு கடந்து வந்தன.

இவற்றில் முதலது மரபு வழுவாமற் காத்தலாகும்; மற்றை மூன்றும் மரபுவழுவமைதியாகும்.

 

16

இயற்கைப்பொருள் மரபுவழுவமைதி

இயற்கைப்பொருளை, ஆக்கமும் காரணமும் கொடுக்காமல் இத்தன்மையதென்று சொல்ல வேண்டும்.

(எ-டு) மெய் உள்ளது; பொய் இல்லாதது; நீர் தண்மையானது; பால் வெண்மையானது; பயிர் பசியது.

இயற்கைப்பொருளை இத்தன்மையது என்று வரும் வினையால் கூறுவதால், இது வழுவமைதி ஆயிற்று.

 

17

செயற்கைப்பொருள் மரபு வழாநிலை வழுவமைதி

செயற்கைப்பொருள், காரணச்சொல் முன்னும் ஆக்கச்சொல் பின்னுமாகவும், காரணச்சொல் தொக்கு நிற்க ஆக்கச் சொல்லுடனும், ஆக்கச்சொல் தொக்கு நிற்கக் காரணச் சொல்லுடனும், இவ் இருவகைச் சொல்லும் தொக்கு நிற்கவும் வரும்.

1. எரு இட்டு களைபறித்து நீர் பாய்ச்சியதால் பயிர் நல்லவாயின.

(முன் காரணச் சொல்லும் பின் ஆக்கச் சொல்லும் பெற்றது)

2. பயிர் நல்லவாயின – காரணச் சொல்லின்றி ஆக்கச் சொல் பெற்றது.

3. எரு இட்டு களைபறித்து நீர் பாய்ச்சியதால் பயிர் நல்ல – ஆக்கச் சொல்லின்றிக் காரணச்சொல் பெற்றது.

4. பயிர் நல்ல – காரணச்சொல், ஆக்கச்சொல் இரண்டும் தொக்கு நின்றன.

இவற்றுள், முதலாவது மரபு வழாமல் காத்தலும் மற்றை மூன்றும் மரபுவழுவமைதியும் ஆகும்.

 

18

விடைமரபு வழுவா மற்காத்தல்

 

தம்மிடத்து இல்லாத பொருளை இல்லையென்று சொல்லப் புகும்போது, வினவப்பட்டதற்கு இனமாய்த் தம்மிடத்து உள்ள பொருளைக் கூறி, அச் சொல்லைக்கொண்டு அதனை இல்லை என்று சொல்லியும், இருக்கிற பொருளாயின் இவ்வளவு உண்டென்றும் வினாவும் விடையுமாகிய சொல் சுருக்கம் கருதிச் சொல்லுவர்.

1.‘பயறு உள்ளதோ கடைக்காரரே!’ என்றவர்க்கு அது இல்லை என்பவர், ‘உழுந்து உண்டு’, ‘உழுந்தும் துவரையும் உண்டு’ என அதன் இனத்தைச் சொல்வர்.

இந்த இனமொழிகள், பயறு இல்லை எனும் விடைப் பொருளைத் தருவதுடன், மேலே ‘உழுந்து உள்ளதோ?’, ‘துவரை உள்ளதோ?’ என்னும் வினாக்களும், அவற்றின் விடைகளும் பெருகாமற் செய்தமை காண்க.

2.‘பயறு உள்ளதோ கடைக்காரரே!’ என்றவர்க்கு அது உண்டு என்பவர் ‘இரண்டு மூட்டை உண்டு’, ‘இருபத்தைந்து அயிரியெடை (கிலோ) உண்டு’ என அதன் அளவைச் சொல்வர்.

இந்த அளவைமொழிகள், பயறு உண்டு என்னும் விடைப் பொருளைத் தருவதுடன், மேலே ‘எவ்வளவு உண்டு?’ என்னும் வினாவும் அதற்கு விடையும் பெருகாமற் செய்தமை காண்க.

 

19

ஈ தா கொடு என்பன

ஈ என்பது இழிந்தவன் தன்னைவிட உயர்ந்தவனிடத்தில் ஒன்றை இரக்கும் போதும், தா என்பது ஒப்போன் தனக்கு ஒப்பானவனிடத்தில் ஒன்றை வேண்டும் போதும், கொடு என்பது உயர்ந்தவன் தன்னின் இழிந்தவனிடத்தில் ஒன்றைப் பெற விரும்பும் போதும் வரும்.

தந்தையே ஈ -  இழிந்தோன் இரப்பு

தோழா தா – ஒப்போன் இரப்பு

மைந்தா கொடு – உயர்ந்தோன் இரப்பு

 

20

மரபுவழுவமைதி – குறிப்பாற் பொருள்தருதல்

வெளிப்படையால் அன்றிக் குறிப்பினால் பொருளறியப்படுகிற சொற்களும் சில உண்டு.

‘குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர்’ என்ற இடத்தில் கோழி எறிவரென்பது தலைமைப் பொருளாகாமல் பெருஞ்செல்வ வாழ்க்கையர் என்பது குறிப்பினால் உணரப்படுதல் காண்க.

 

21

மரபு வழாநிலை வழுவமைதி – அஃறிணையை உயர்திணைபோல வைத்துக் கூறுதல்

கேளாதவற்றைக் கேட்பவைபோலவும், பேசாதவற்றைப் பேசுபவைபோலவும் இயங்காதவற்றை இயங்குபவைபோலவும் (இவையல்லாத வேறு தொழில்களைச் செய்யாதவற்றைச்) செய்பவைபோலவும் அஃறிணையிடத்தும் சொல்லப்படும்.

1.’நன்னீரைவாழி அனிச்சமே’ – கேட்பதுபோலச் சொல்லப்பட்டது.

2. ’பகைமையைக்கண் உரைக்கும்’ – பேசுவதுபோலச் சொல்லப்பட்டது

3. ‘இவ்வழி அவ்வூர்க்குப்போகும்’ – இயங்குவதுபோலச் சொல்லப்பட்டது

4. ‘தன்னெஞ்சே தன்னைச்சுடும்’ – செய்வதுபோலச் சொல்லப்பட்டது 

 

22

உருவகத்திலும் உவமையிலும் திணைகள் மாறிவருதல்

உருவக அணியிலும் உவமை அணியிலும் உயர்திணை அஃறிணைகளும் சினை முதல்களும் தம்முள் மாறிவருதலையும் இன்னும் சொல்லாது விடப்பட்டவற்றையும் பேணிக்கொள்க.

1.’அரசனாகிய அரிமாவிற்குப் பகைவர் கூட்டமாகிய யானைகள் அஞ்சி ஓடின’

என்று உருவகத்தில் உயர்திணை அஃறிணையோடு மயங்கியது. ‘கல்வி மங்கூயூ நல்லோர் விரும்புவர்’ என்று அஃறிணை உயர்திணையோடு மயங்கியது.

2.’அவனுக்குத் தம்பியர் இருவரும் இரண்டு தோள்கள்’ என்று உயர்திணை முதல் உயர்திணைச் சினையோடு மயங்கிற்று. ‘தோளாகிய மலை’ என்று உயர்திணைச் சினை அஃறிணை முதலோடு மயங்கியது.

3. ‘மயில்போலும் மங்கை’ என்று உவமையில் உயர்திணை அஃறிணையோடு மயங்கிற்று. ’நெற்பயிர்கள் கல்வியாளர்போல் வணங்கிக் காய்த்தன’ என உஃறிணை உயர்திணையோடு மயங்கிற்று.

4. ‘கயல்போலும் கண்’ என உயர்திணைச்சினை அஃறிணைமுதலோடு மயங்கிற்று. ‘தளிர்போலும் மேனி’ என உயர்திணமுதல் அஃறிணைச் சினையோடு மயங்கிற்று.

5. ‘இவன் சரசுவதிக்கு ஒப்பானவன்’ எனப்பால் மயங்கக்கூறுதலும், செங்கோல், வீரக்கழல் என்று ஒருபொருளின் தன்மையை வேறொரு பொருளின்மேல் வைத்துக்கூறுதலும், அரசு வேந்து அமைச்சு தூது ஒற்று என உயர்திணையை அஃறிணை வாய்பாட்டாற் கூறுதலும் பிறவும்.

————————————————————————–

உதவியவை:

1. பவணந்தியாரின் நன்னூல்.

2. பல்வேறு  அறிஞரின் நன்னூல் உரைகள்.

உதவியார்க்கு மனமார்ந்த நன்றி.

————————————————————————–

 

வழு தொடர்பாக…! – 4

வழுவமைதி (தொடர்ச்சி) 

வினா

வினாவாவது, அறியக் கருதியதை வெளிப்படுத்துவதாம் 

உயிர் எத்தன்மையது? – வினா வழாநிலை.

கறக்கின்ற எருமை சினையோ? என்பது வினா வழு. 

வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல், என அறுவகைப்படும். 

எடுத்துக்காட்டு: 

1. மாணவன் ஆசிரியரிடம், ஐயா, இந்த வெண்பாவிற்குப் பொருள் என்ன? என்று கேட்பது அறியா வினா.

2. அங்கு தெரிவது குச்சியோ கிழவரோ?  என்று கேட்பது ஐய வினா.

3. ஆசிரியர், மாணவனிடம், இந் நூற்பாவிற்குப் பொருள் யாது? என்று கேட்பது அறிவினா.

4. காராமணிப்ப பயறுண்டோ கடைக்காரரே? என்று கேட்பது கொளல் வினா

5. செழியனுக்கு ஆடையில்லையா? என்று கேட்பது கொடை வினா

6. வழுதி! சாப்பிட்டாயா? என்று கேட்பது ஏவல் வினா

விடை

விடையாவது, வினா ஆகிய பொருளை அறிவிப்பதாம்.

உயிர் உணர்தல் தன்மையது – விடை வழாநிலை. 

தில்லைக்கு வழி எது? என்று கேட்டால் சிவப்புக்காளை முப்பது ஆயிரம் என்பது விடைவழு. 

விடை, சுட்டு, எதிர்மறை உடன்பாடு, ஏவல், வினா எதிர் வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டு வகைப்படும்.

எடுத்துக்காட்டு

1. சென்னைக்கு வழி யாது? என்று வினவினால் இது என்பது சுட்டு

2.. இது செய்வாயா? என்பதற்குச் செய்யேன் என்பது எதிர்மறை

3. இது செய்வாயா? என்பதற்குச் செய்வேன் என்பது உடன்பாடு

4. இது செய்வாயா? என்பதற்கு நீ செய் என்பது ஏவல்

5. இது செய்வாயா? என்பதற்குச் செய்யேனோ? என்பது வினாவெதிர் வினாதல்

6. இது செய்வாயா? என்பதற்கு உடம்பு வலிக்கிறது எனபது உற்றது உரைத்தல்

7. இது செய்வாயா? என்பதற்கு உடம்பு வலிக்கும் என்பது உறுவது கூறல்

8. இது செய்வாயா? என்பதற்கு  மற்றையது செய்வேன் என்பது இனமொழி விடை.

(மரபு வழுவமைதியுடன் தொடர் முடியும்)

வழு தொடர்பாக…! – 3

பால், இடம், கால வழுவமைதி

 

வழு, வழாநிலை பற்றி ஓரளவு விளக்கம் பெற்று இருப்பதால் (சுருக்கம் கருதி) நேரே வழுவமைதி பற்றி அறிவோம்.

 

பால்வழுவமைதி

 

மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, சினம், இழிவு ஆகியவற்றால் ஒரு பாற் பொருள் வேறுபாற் சொல்லாகவும் கூறப்படும்.

 

எடுத்துக்காட்டு:

1. உவப்பு

அன்பின் மிகுதியால் மகளை, “வாடா கண்ணு” என்றவிடத்து உவப்பினால் பெண்பால் ஆண்பாலாகச் சொல்லப்பட்டது.

 

2. உயர்வு

ஒருவனை, “அவர் வந்தார்” – என்ற விடத்து,  உயர்வினால் ஒருமைப்பால் பன்மைப்பாலாகச் சொல்லப்பட்டது

 

3. சிறப்பு

“இறைவன் எல்லா உயிர்க்கும் தாய்” – என்றவிடத்துச் சிறப்பினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

 

4.சினம்

“‘எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல்’ –  என்றவிடத்துக் சினத்தினாற் பன்மைப்பால் ஒருமைப்பாலாக சொல்லப்பட்டது.

 

5. இழிவு

பெண்போல் நடப்பவனை, “இவன் பெண்” – என்றவிடத்து இழிவினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

 

ஒருமை பன்மை மயக்கம்:

வெயில் எல்லாம் மறைத்தது மேகம்.

பன்மை ஒருமை மயக்கம்:

இரண்டு கண்ணும் சிவந்தது.

 

 

இடவழுவமைதி

 

ஓரிடத்தில் பிறவிடத்துச் சொல்லைச் சிலசமையம் தழுவிச் சொல்லுதல் உண்டு.

 

எடுத்துக்காட்டு:

செழியன்தாய் இதைச் செய்வேனா? – என்னுமிடத்து நான் என்று தன்மையில் சொல்லாமல், செழியன்தாய் என்று படர்க்கையில் சொல்லல்.

 

என் தம்பியை இங்கே பெற்றேன்; இனி எனக்கு அரியது என்ன? – என்னுமிடத்து உன்னை இங்குப் பெற்றேன் என்று முன்னிலையில் சொல்லாமல், என் தம்பியை இங்கே பெற்றேன் என்று படர்க்கையில் சொல்லல்.

 

காலவழுவமைதி

 

இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என மூன்று காலங்களிலும் தொழில் இடையறாமல் ஒருதன்மையாக நடக்கின்ற பொருள்களை நிகழ்காலத்தில் கூறல்.

 

எடுத்துக்காட்டு:

மலை நிற்கின்றது

கதிரவன் கிழக்கில் எழுகின்றது.

சந்திரன் இரவில் தோன்றுகின்றது.

 

விரைவு, மிகுதி, தெளிவு என்னும் மூன்று காரணங்களாலும், இக்காரணங்கள் இல்லாமலும் ஒருகாலத்தை இன்னொரு காலமாகச் சொல்லல்.

 

எடுத்துக்காட்டு:

வருகிறாயா? என்ற வினாவிற்கு, விரைவு காரணமாக “வந்தேன், வந்தேன்” என்று கூறுதல். இங்கு, விரைவு காரணமாக எதிர்காலம், இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.

 

“அந்த மடுவில் குதித்தால், செத்தாய்” – என்றவிடத்து அந்த ஆழமான மடுவில் குதித்தால் இறப்பது மிகுதியாக நடத்தல் காரணமாக, எதிர்காலம்(குதித்தால்) இறந்தகாலமாக(செத்தாய்)ச் சொல்லப்பட்டது.  

 

“எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின், மழை பெய்தது”  என்றவிடத்து, எறும்பு முட்டை எடுத்து மேட்டில் ஏறினால் மழை பெய்தல் தெளிவாதலால், எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.

 

“நான் அந்தக் காலத்தில் விளையாடுவது இந்த இடம்” எனபதில் மேற்கூறிய காரணங்கள் இல்லாமலே இறந்தகாலம் எதிர்காலமாகச் சொல்லப்பட்டது.

 

 

 

 

வழு தொடர்பாக…! – 2

திணைவழு, திணை வழாநிலை,

திணை வழுவமைதி

 

சொல்லியங்களில், எழுவாய் எந்தத் திணையில் அமைந்துள்ளதோ அத்திணைக்கு உரியவாறே முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால், அது திணை வழுவாகும். 

 

  

எடுத்துக்காட்டு: அண்ணன் வந்தது.

இச் சொற்றொடரில் ‘அண்ணன்’ என்னும் உயர்திணை எழுவாயாக வந்துள்ளது. ‘வந்தது’ என்பது அஃறிணைச் சொல், அண்ணன் என்னும் உயர்திணை எழுவாய்க்கு, முடிக்கும் சொல்லாக ‘வந்தது’
இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயர்திணை எழுவாய்க்கு
அஃறிணை முடிவு அளிப்பதும், அஃறிணை எழுவாயை உயர்திணையில் முடிப்பதும் வழுவாகும்.

  

 

ஒரு திணைக்கு உரிய பெயருக்கு ஏற்ப அதே திணையில்
முடிப்பது திணை வழாநிலையாகும்.
 

 

  

எ.டு. : இசைமொழி பாடினாள்
புறா பறக்கிறது

‘இசைமொழி’ என்னும் உயர்திணைப்பெயர், ‘பாடினாள்’ என்னும் உயர்திணைக்குரிய வினைமுற்றைக் கொண்டு முடிந்தது.
‘புறா’ என்னும் அஃறிணைப் பெயர் ‘பறக்கிறது’ என்னும் அஃறிணை வினைமுற்றைக் கொண்டு முடிந்தது.

  

வழுவமைதி:   

 

உயர்திணைப் பெயரோடு அஃறிணைப் பெயரும்
எழுவாயாக வரும் பொழுது, முடிக்கும் சொல்லை உயர்திணையில் அமைக்கவேண்டும்.

 
 
 

  

செழியனும் குதிரையும் வந்தனர்.
மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா.

இவ்வாறே, சிறப்பு, மிகுதி, இழிவு என்னும் காரணங்களால்
ஏதேனும் ஒரு திணையின் முடிபை அத்தொடர்களுக்கு
அளிப்பதால் இவை திணை வழுவமைதி ஆகின்றன.

திணைப்பொருளில் ஐயம் ஏற்படும் பொழுது, அதனைப் பொதுச்சொல்லால் அமைத்து, முடித்துக் கூறுவர்.
எ.டு.: குச்சியா கிழவரா அங்கே தோன்றுகின்ற உரு?

 

  

வழு தொடர்பாக…!

 வழு, வழாநிலை, வழுவமைதி

 

உயர்திணை அஃறிணை என்னும் இரண்டு திணைகள்,

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐம்பால்கள்,

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்காலங்கள்,

தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்கள்,

வினா,

விடை,

மரபுகள் – ஆகிய ஏழும் சொற்றொடர்களில் தத்தம் இலக்கணமரபு தவறி வந்தால் அவை வழுவாம்.

 

வழு – இலக்கணக் குற்றம்.

வழா நிலை – இலக்கணக்குற்றம் இல்லாமல் அமைத்தல்

வழுவமைதி – இலக்கணக்குற்றம் உள்ளதாகக்கருதப்பட்டாலும் அமைதி கூறி ஏற்றுக்கொள்வது

 

எடுத்துக்காட்டுகள் :

திணை வழு – அவன் வந்தது

பால் வழு – அவன் வந்தாள்

இட வழு – நாம் வந்தான்

கால வழு – நாளை வந்தாள்

வினா வழு – கறக்கிற எருமை பாலோ சினையோ?

விடை வழு – பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம் என்பது

மரபு வழு – யானை செலுத்துவாரை இடையர் என்பது

வழுவமைதி தொடரும்…

Follow

Get every new post delivered to your Inbox.